சென்னை: ஐபிஎல் 19வது தொடரின் 7வது போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி, கெண்டைக்காலில் ஏற்பட்ட காயத்தால், அடுத்த 2 வாரங்களுக்கு ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் சென்னை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் ஜொலிக்காதது, சென்னை ரசிகர்களை பெரியளவில் கவலை அடையச் செய்தது.
சென்னை அணியின் மற்றொரு அதிரடி வீரர் டெவால்ட் புரூவிஸ், சுளுக்கு பிரச்னையால் ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் ஆடாதது பெருத்த பின்னடைவாக காணப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகள் சரிந்ததை அடுத்து இம்பேக்ட் பிளேயராக இறக்கப்பட்ட சர்பராஸ் கானும் ஏமாற்றம் தந்தார். சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, நூர் அஹமது உள்ளிட்டோர், ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி முன், மிக சாதாரண வீரர்களாக தோன்றினர்.
அந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்தி, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை வீரர்கள் தீவிரம் காட்டுவர் என எதிர்பார்க்கலாம். பஞ்சாப் அணி, குஜராத் அணியுடனான போட்டயில், கூப்பர் கனோலியின் அதிரடியால் எளிதில் வெற்றியை சுவைத்தது. இன்றைய போட்டியிலும் அவரது பேட்டில் ரன்கள் தெறிக்கும் வாய்ப்பு உள்ளது.
அந்த போட்டியில் பஞ்சாப் சுழல் வீரர் யுஸ்வேந்திர சஹல், பந்து வீச்சில் பலப்பல மாற்றங்களை காட்டி, எதிரணியினரை திணறடித்தார். பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பிரியன்ஸ் ஆர்யா, மிட்செல் ஓவன் உள்ளிட்டோர் பேட்டிங்கில் வல்லமையை காட்டுவர். இரு அணி வீரர்களும் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க முனைப்பு காட்டுவர் என்பதால் இன்றைய போட்டியில் சுவாரசியத்துக்கு குறைவு இருக்காது.
* நேருக்கு நேர்
* சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள், 32 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
* அவற்றில் இரு அணிகளும் தலா 16 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.
* சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் 240 ஆக உள்ளது.
* பஞ்சாப் அதிகபட்சமாக 231 ரன்களை குவித்துள்ளது.
* சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 120.
* பஞ்சாப், சென்னை உடனான ஒரு போட்டியில் 92 ரன்களில் சுருண்டுள்ளது.
* கடந்த ஆண்டு நடந்த இரு போட்டிகளிலும், சென்னை அணியை, முறையே, 18 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி கண்டுள்ளது.
