பாபோஸ்: தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆடிவருகிறார். இதில் வெற்றி பெறும் வீரர், இந்தியாவை சேர்ந்த, உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன் மோதும் வாய்ப்பை பெறுவார். இந்நிலையில், நேற்று நடந்த 4ம் சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா, ஜெர்மன் வீரர் மாத்தியாஸ் புளுபாம் மோதினர். இப்போட்டியில் இரு வீரர்களும் சமபலத்துடன் மோதியதால் கடைசியில் டிராவில் முடிந்தது.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவை எதிர்கொண்ட உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிண்டாரோ, சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார். கடந்தாண்டு உலகக் கோப்பையை வென்ற வீரரான சிண்டாரோ, கேண்டிடேட்ஸ் போட்டியில் 4 சுற்றுகளில் 3ல் வெற்றி பெற்று, 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முந்தைய சுற்றில் சிண்டாரோவிடம் தோற்ற பிரக்ஞானந்தா, 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். மாத்தியாஸ், அனிஷ் கிரி ஆகியோரும் 2 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளனர். கரவுனா, 2.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
