உலகக் கோப்பை டி20 ஜில்லென்று ஒரு வெற்றி: ஆஸியை வென்று ஜிம்பாப்வே வரலாற்று சாதனை

கொழும்பு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி அட்டகாசமாக ஆடி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி வரலாற்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை டி20 தொடரின் 18வது போட்டி, இலங்கையின் கொழும்பு நகரில், குரூப் பி-யில் உள்ள ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இடையே நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்கள் டடிவனஷா மருமணி, பிரையன் பென்னட் இணை, 7.3 ஓவரில் 61 ரன்கள் சேர்த்த நிலையில், மருமணி, 35 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின், பென்னட்- ரையான் புரி இணை சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்த நிலையில், ரையான், 35 ரன்களில் வீழ்ந்தார். அடுத்து வந்த கேப்டன் சிக்கந்தர் ராஸா, ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 25 ரன், பென்னட் ஆட்டமிழக்காமல், 56 பந்துகளில் 64 ரன்கள் குவித்தனர்.

அதனால், 20 ஓவரில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆஸி அணியின் துவக்க வீரர் ஜோஸ் இங்லீஸ் 8, பின் வந்த கேமரூன் கிரீன் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4வது ஓவரில் டிம் டேவிட் ரன் எடுக்காமல் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து கேப்டன் டிராவிஸ் ஹெட் 17 ரன்னுக்கு ஆட்டமிழந்து சொதப்பினர். 4.3 ஓவரில் ஆஸி 29 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல், மேட் ரென்ஷா இணை 5வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில், மேக்ஸ்வெல் 31 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்த ஆஸி வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 19.3 ஓவர்களில் ஆஸி 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், 23 ரன் வித்தியாசத்தில் ஆஸிக்கு, ஜிம்பாப்வே அதிர்சித் தோல்வியை பரிசாக தந்தது. ஜிம்பாப்வே தரப்பில் 4 விக்கெட் வீழ்த்திய பிளெஸிங் முஸராபாணி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: