கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமாக கன்னியம்பலம் பகுதியில் உள்ள 12 கடைகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அறிந்த கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கத்தினர் கடைகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று கோயில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோயில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் கன்னியம்பலத்தில் உள்ள 11 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் இன்று 3வது நாளாக வியாபாரிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரதவீதி, சன்னதி தெரு, கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பகுதி, திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் இன்றும் கடைவீதிகள் வெறிச்சோடி கிடந்தது. இதற்கிடையே 3 நாட்களாக தொடர் கடை அடைப்பால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் உணவு, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதியுற்று வருகின்றனர். எனினும் ஆவின் பாலகங்கள் திறந்துள்ளதால் தட்டுப்பாடு இன்றி பால் கிடைப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
