பல்லகேலே: ஓமன் அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, இலங்கை அணி 105 ரன் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. உலகக் கோப்பை டி20 தொடரின் 16வது போட்டி, இலங்கையின் பல்லகேலே நகரில் நேற்று நடந்தது. அதில் இலங்கை – ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்து வீசியது. அதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர்கள் கமில் மிஸாரா 8, பதும் நிஸங்கா 13 ரன் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின் இணை சேர்ந்த குஸால் மெண்டிஸ், பவன் ரத்நாயகே, ஓமன் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை, 3வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் குவித்த நிலையில், ரத்நாயகே 28 பந்தில் 60 எடுத்து ஆட்டமிழந்தார். பின் வந்த கேப்டன் தாசுன் ஷனகா துவக்கம் முதல் பட்டையை கிளப்பி ரன்களை குவித்தார்.
20 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் வெளுத்த நிலையில் ஜிதேன் ராமாநந்தியிடம் அவர் விக்கெட் இழந்தார். 20 ஓவர் முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 226 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஓமன் களமிறங்கியது. அதன் துவக்க வீரர்கள் ஆமிர் கலீம் 6, கேப்டன் ஜதிந்தர் சிங் 1 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி தந்தனர். பின் வந்தோரில் முகம்மது நதீம் ஆட்டமிழக்காமல் 53, வாசிம் அலி 27 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஓமன் 9 விக்கெட் இழந்து 120 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 105 ரன் வித்தியாசத்தில் இலங்கை அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இலங்கை தரப்பில் துஷ்மந்த சமீரா, மஹீஸ் தீக்சனா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
