நேபாளத்தை சிதறடித்த இத்தாலியின் அதிரடி: துவக்க வீரர்கள் எழுதிய முடிவுரை

மும்பை: உலகக் கோப்பை டி20 தொடரின் 17வது போட்டி, சி பிரிவில், மும்பையில் நேற்று நடந்தது. அதில் இத்தாலி – நேபாளம் அணிகள் களம் கண்டன. முதலில் ஆடிய நேபாளம் அணி வீரர்கள், இத்தாலி பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆஸிப் சேக் 20, கேப்டன் ரோகித் பவுதெல் 23, தீபேந்திர சிங் அய்ரீ 17, ஆரிப் சேக் 27 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வீழ்ந்ததால், 19.3 ஓவரில் நேபாளம் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின், 124 ரன் இலக்குடன் களமிறங்கிய இத்தாலி துவக்க வீரர்கள் ஜஸ்டின் மோஸ்கா, ஆன்டனி மோஸ்கா, நேபாளம் பந்து வீச்சை சூறையாடினர். ஜஸ்டின், 44 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 60 ரன், ஆன்டனி 32 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 62 ரன் விளாசினர். 12.4 ஓவரில் இத்தாலி, விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் குவித்தது. அதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் இத்தாலி அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. 3 விக்கெட் சாய்த்த இத்தாலியின் கிறிஸன் கலுகமகே ஆட்ட நாயகன்.

Related Stories: