சென்னை: பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து – தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ3,112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும் – வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை- வளர்ச்சித் திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு கைவிரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அதிமுக.
நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. அதோடு அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக்கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு உறுதுணையாக இருந்து துரோகம் செய்து வருகிறது அதிமுக.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புது புது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியைத் தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இழைத்து வரும் ஒன்றிய பாஜக வை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா இன்ஜின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்கத் துடிக்கும் அடிமை அதிமுகவைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து மாநகரங்களிலும் தலா ஒரு இடத்திலும் மற்ற இடங்களில் கழக நகர-ஒன்றிய-பேரூர் அளவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – மாநில – மாவட்ட நிர்வாகிகள் – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும் – ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்தவாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்களிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவில், தமிழ்நாடு முழுவதும் 1500க்கு மேற்பட்ட இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சைதாப்பேட்டையில் இன்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
