எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை : எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, “உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.

எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி.“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது.” என தெரிவித்துள்ளார்.

Related Stories: