கேரளா: கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ இணையத்தில் பரவியதை தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 16-ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இந்த வீடியோ வைரலானதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து. கோழிக்கோடு காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர். இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஷிம்ஜிதாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது.
