சென்னை விமான நிலையம் அருகே வானில் 2 மணி நேரம் வட்டமடித்த விமானம்: வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று பிற்பகலில், போயிங் ரகத்தை சேர்ந்த பெரிய விமானம் ஒன்று, சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் அவ்வப்போது விமான நிலையத்தில் தரையிறங்குவது போல் தாழ்வாக பறப்பதும், திடீரென வானத்தின் உயரத்தில் பறக்கத் தொடங்கி, மீண்டும் வட்டமடிப்பதுமாக, கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியபடி நீண்ட நேரம் பறந்து கொண்டு இருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் பரபரப்படைந்தனர். அந்த விமானத்துக்கு ஏதோ ஆபத்தாக இருக்கலாம் என்று கருதி, காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கும் பொதுமக்கள் தொடர்பு கொண்டனர். பிறகு, சென்னை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தனியார் பயிற்சி விமானம். அவர்கள் முறைப்படி இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையான டிஜிசிஏ ஆகியவற்றிடம் முன்னதாகவே அனுமதி பெற்று, சென்னை விமான நிலையத்தில், பெரிய ரக போயிங் விமானங்கள் தரையிறங்குவது குறித்து, பயிற்சி விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என தெரிந்தது. இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். எனவே இதில் பதற்றப்படுவதற்கோ, அச்சப்படுவதற்கோ எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய பகுதியில் பரபரப்பு ஓய்ந்து, சகஜ நிலை திரும்பியது.

Related Stories: