சாலையை சீரமைக்க கோரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்

ஆலந்தூர், பிப்.10: மூவரசம்பட்டு பிரதான சாலையை சீரமைக்க கோரி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மூவரசம்பட்டு – திரிசூலம் பகுதிகளை இணைக்கும் வகையில், மூவரசம்பட்டு பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் அதிகமான டிப்பர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலை முற்றிலும் பழுதடைந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை செப்பனிடக் கோரியும், டிப்பர் லாரிகள் இயக்கப்படுவதை தடுக்க கோரியும் திரிசூலம் உழைப்பாளி நகர் கிருஷ்ணா நகர் ஜெயலட்சுமி நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து நேற்று லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து, பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையில் போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்களோ அதிகாரிகள் உரிய பதில் அளித்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம், என்று கூறி கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இந்நிலையில் அங்கு வந்த திரிசூலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அந்தோணி, பழுதடைந்த சாலையை விரைவில் செப்பனிட்டு தருவதாக உறுதியளித்ததார். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: