முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 500 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை மண்டல கோஇந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், கருணை இல்லங்கள் நடத்தப்பட்டு வருவதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய 2,800 இணைகளுக்கும், 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலி மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் கட்டணமில்லாமல் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

2025-26ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “திருக்கோயில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மங்கலப் பொருட்கள் வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார். பின்னர் மாநிலம் முழுவதும் திருக்கோயில்கள் சார்பில் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக திருக்கோயில்கள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு வேப்பேரி, பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் விழாவில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்ய உள்ளார். தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்கும சிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதுபோல தமிழ்நாடு முழுவதும் 2,000 மூத்த தம்பதியினருக்கு அந்தந்த மண்டலங்களில் சிறப்பு செய்யப்படுகின்றது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: