சென்னை: சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தூய்மை பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்’ தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, 9.12.2022 அன்று இத்திட்டம் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலமாக தூய்மை பணியாளர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி, பாதுகாப்பு உபகரணம் வழங்குதல், சுகாதார காப்பீடு, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தொடர் உடல்நல பரிசோதனைகள் மற்றும் மாற்று வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியன தடையின்றி பெறுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் தூய்மை பணியாளர்களுக்கு திறன் மேம்படுத்துதல், மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றினை தொடர்ந்து கண்காணிக்க ரூ.50 கோடி அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திட 14.8.2025 அன்று தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம், தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டம், பணியின்போது உயிரிழக்கும் தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை ஆகிய 6 புதிய சிறப்பு திட்டங்களை முதல்வரால் அறிவிக்கப்பட்டு, தற்போது அந்த திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகரங்களையும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பேணிக்காக்கும் தூய்மை பணியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பணியாற்றும் சூழலில் பசியற்று இருக்கவும் தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் 15.11.2025 அன்று முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விரிவுப்படுத்தி தொடங்கி வைத்து, வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.
இந்த விரிவாக்கத்திற்கு பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,29,689 தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக ஆண்டு ஒன்றிற்கு ரூ.213 கோடியே 92 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, பணியின்போது உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி, தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். முன்னதாக, தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எம்.நாசர், மதிவேந்தன், எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், சுதர்சனம், கிருஷ்ணசாமி, கணபதி, துரை சந்திரசேகர், தலைமை செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப் குமார், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரதாப், தூய்மை பணியாளர் நல வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
