ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9 ஆயிரம் கோடியில் கார் உற்பத்தி ஆலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

வேலூர்: ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9,000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா ஆலையில் கார் உற்பத்தியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘உலக நாடுகளே போட்டி போடக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது’ என்று பெருமிதம் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா மோட்டார் கார் உற்பத்தி ஆலை கட்டுமான பணிக்கு கடந்த 2024 செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து ரூ.9,000 கோடியில் நிறுவப்பட்ட டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் முதற்கட்ட பணி சுறுச்சுறுப்பாக நடந்தது. இங்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் விலை உயர்ந்த சொகுசு கார்களான ஜாகுவார், லேண்ட்ரோவர் போன்ற கார்களை தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கார் உற்பத்தியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்தார். ரூ.18.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிப்காட் நிர்வாக அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, சிப்காட் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ்-ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின் முதல் அலகு ரூ.900 கோடி செலவில் நிறுவப்பட்டது.

இதனை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலக அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு குழுமமாக டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா என்று சொன்னாலே அதற்கு ஒரு பிராண்ட் வேல்யூ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆழமான உறவும் இருக்கிறது.

இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழ்நாடுதான். அதுமட்டுமா, மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். மோட்டார் வாகனத் துறையில், தமிழ்நாடு இன்றைக்கு ‘டாப் பொசிஷனில்’ இருக்கிறது என்றால், அதற்கு பெரிய பாரம்பரியம் இருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களின் திட்டங்களை எல்லாம் நிறுவியிருக்கிறார்கள்.

அதேபோல், டாடா மோட்டார்ஸ், உலகளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின் வாகனத் துறையில், ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. உயர் தொழில்நுட்பங்களை தன்னகத்தே ஏற்று, உலக அளவில் எந்த நாட்டின் தயாரிப்புகளோடும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டிற்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவதாக இந்த ஆலை அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், அனைத்து மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்த மாநிலம் என்பதுதான். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தயாரிப்புகள், உலக சந்தைகளுக்கும் சேர்த்தே தயாரிக்கப்படுகிறது என்பதற்கான பெருமைமிகு அடையாளம்தான் இந்த ஆலை.

வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து சிறப்பாக செயல்பட வேண்டும். ஏற்கனவே, நாம் லீடராக இருக்கும் துறைகளில், மேலும் உயர்ந்த தரத்தையும், இன்னும் பெரிய சாதனைகளையும் செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஸ்பெஷல் கவனத்துடன் திராவிட மாடல் அரசு உழைத்துக்கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகனம், டெக்ஸ்டைல், ஐடி, ஆர் அண்டு டி, ஜி.சி.சி என்று பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக உலக அரங்குகளில், தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய இளைஞரிடத்தில் கேட்டேன். டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள் பலர் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லோரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், ‘லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்துகொண்டே, பி.டெக்., பட்டம் படிக்கவும் இந்த நிறுவனமே உதவி செய்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு ஒரு கேரண்டி கொடுத்தால், அதை எப்படி காப்பாற்றுகிறோம் என்று உலக முதலீட்டாளர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்கு போட்டி மாநிலம் என்பதையெல்லாம் தமிழ்நாடு எப்போதோ க்ராஸ் செய்துவிட்டது. இப்போது உலக நாடுகளே தமிழ்நாட்டுடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

இந்த விழா மூலமாக நாம் பெற்றிருக்கும் நல்லுணர்வை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், டாடா குழுமம், தனது பல்வேறு தயாரிப்புகளுக்கான முக்கிய உற்பத்தி மையமாக தொடர்ந்து தமிழ்நாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். எந்தத் துறையில் நீங்கள் முதலீடு செய்தாலும், அதற்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம். திட்ட செயல்பாடுகளை எளிமையாக்கி, அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

திராவிட மாடல் அரசை நீங்கள் முழுமையாக நம்பலாம். எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் முதலீடுகளை யார் மேற்கொள்ள வந்தாலும், அவர்களை திறந்த மனதோடும், திறந்த கரங்களோடும் தமிழ்நாடு நிச்சயமாக வரவேற்கும். தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும். அதுதான் எங்கள் பண்பாடு. அதுதான் எங்கள் பாரம்பரியம். தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. பொருளாதார வளர்ச்சியுடன் சமூகநீதியை உள்ளடக்கியது. பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது, எங்களின் இந்த நல் முயற்சிகளுக்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும்’

ராணிப்பேட்டை சிப்காட்டில் நடந்த டாடா மோட்டார் (ஜேஎல்ஆர்) நிறுவன நவீன கார் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தலைவர் சந்திரசேகரன் பேசியதாவது: இந்தத் தொழிற்சாலையின் தரத்திற்குச் சிறந்த சான்றாக அமையும் வகையில், சொகுசு வாகனங்களின் முன்னுதாரணமாகத் திகழும் ரேஞ்ச் ரோவர் பிராண்டின் ‘இவோக்’ பிராண்ட் இங்கே உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மாநில அரசின் அபாரமான ஆதரவு, அரசு அலுவலர்களின் மேம்பட்ட செயல் திறன், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் எங்கள் கான்ட்ராக்டர் மற்றும் ஊழியர்களின் விடாமுயற்சி ஆகியவற்றால் இத்தொழிற்சாலை மிகக்குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் வாகன உற்பத்தி மையத்தில் ஒன்றாக பனப்பாக்கம் மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இன்று தி ரேஞ்ச் ரோவர் ‘இவோக்’ மாடல் முதலாவது வாகனமாக இங்கு தயாரிக்கப்பட்டு, அதனை முதல்வர் ஓட்டிப்பார்த்து தொடங்கி வைத்தார். அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்னும் 4 ஆண்டுகளில் 3 பேஸ்களும் பூர்த்தி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சம் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

* ரேஞ் ரோவரை ஓட்டி பார்த்த முதல்வர்

ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் உற்பத்தியான ரேஞ் ரோவர் சொகுசு காரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓட்டி பார்த்து தொடங்கி வைத்தார். அப்போது டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன், டிஆர்பி.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

16 மாதத்திலேயே உற்பத்தி தொடக்கம்

‘இந்த டாடா ஜேஎல்ஆர் ஆலை, 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் இந்தத் திட்டத்திற்கான (எம்ஓயூ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டோம். சிப்காட் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, சில மாதங்களிலேயே 1,207 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார்கள். இது ஒரு மிகப் பெரிய சாதனை.செப்டம்பர் 2024 இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம். 18 மாதங்களில் முடிக்கலாம் என்று நம்முடைய டாடா குழும தலைவர் சந்திரசேகரன் சொன்னார். இப்போது 16வது மாதத்திலேயே முடித்து இப்போது தொடக்க விழாவையும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதுதான் பெரிய பெருமை. இதேபோல, தூத்துக்குடியில், வின்பாஸ்ட் நிறுவனமும் அடிக்கல் நாட்டிய 16வது மாதத்திலேயே உற்பத்தியை தொடங்கி விட்டார்கள். இதுபோன்ற பெரிய பிராஜக்ட் எல்லாம் தொடங்க வேண்டும் என்றால், பொதுவாக 3 அல்லது 4 வருடங்கள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில், இந்த காலகட்டத்தை நாங்கள் பாதியாக குறைத்திருக்கிறோம். தமிழ்நாடு எந்தளவிற்கு தொழில் செய்ய உகந்த, எளிமையான மாநிலமாக இருக்கிறது என்பதற்கு, இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு

‘‘நம்முடைய திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகத்திற்கு எடுத்து சொல்ல, ‘முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு’, அதாவது, ‘கன்வெர்ஷன் கான்கிலேவ்’ இன்னும் சில நாட்களில் நடத்தப் போகிறோம். கிட்டத்தட்ட 100 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதை நீங்கள் அப்போது தெரிந்துகொள்வீர்கள். திட்டங்களை தொடங்கி வைப்பது, அடிக்கல் நாட்டுவது என்ற வகையில், (எம்ஓயூ) கன்வெர்ஷனில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்று வெளிப்படுத்தப் போகிறோம். தமிழ்நாட்டின் விரைவான செயல்பாடுகள், குறித்த நேரத்தில் கிடைக்கின்ற அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள், வணிகம் புரிவதை எளிதாக்கும் செயல்பாடுகள் எல்லாவற்றையும், இந்த மாநாட்டில் காட்டப் போகிறோம்’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* இன்னும் பல தொழிற்சாலைகள், ஆராய்ச்சி திட்டங்கள் வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘நீங்கள் டாடா நிறுவனத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்களோ, அதே அளவு தமிழ்நாட்டையும் நேசிக்கிறீர்கள் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், நீங்கள் தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்தவர் என்ற உரிமையுடன் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

இன்னும் பல புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி- மேம்பாட்டு திட்டங்களையும் நீங்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அடுத்த போர்டு மீட்டிங்லேயே இது தொடர்பாக முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடுதான், எப்போதும், எதிலும் டாடா-வின் ‘முதல் சாய்ஸ்’ ஆக இருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: