சென்னை: பல்வேறு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நேற்று முன்தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு தமிழ்த்தகுதித் தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. காலையில் நடைபெற இருந்த தேர்வை 9233 பேரும், பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வை 9244 பேரும் எழுத இருந்தனர்.
தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடப்பதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மற்றொரு தேதியில் அந்த தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனால் தேர்வுக்கு தயாராகி வந்திருந்த தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகினர். மீண்டும் ஒரு முறை தேர்வுக்கு தயாராக வேண்டுமா, அந்த தேர்வை எப்போது அறிவிப்பார்கள் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். அன்று காலை குரூப்-2ஏ பாடங்களுக்கான தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடத்தப்படும். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற 28ம் தேதிக்குள் அதுசார்ந்த அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் ஓ.டி.ஆர். எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பான தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி, குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். வருகிற 22ம் தேதி நடைபெற இருந்த குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படும். அந்த தகவலும் தேர்வர்களுக்கு மின்னஞ்சல் முகவரி, குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட் குளறுபடி காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் மீண்டும் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு அவர் பெயரில் தான் நேற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
