தமிழகத்தில் விரைவில் புதிதாக 6 அரசு செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 

சென்னை: தமிழகத்தில் மிக விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், அரசு செவிலிய பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் என்பது இந்த அரசு பொறுப்பேற்தற்கு முன்பு ஒரு லட்சத்திற்கு 90 ஆக இருந்தது. அது தற்போது 39.5 ஆக குறைந்திருக்கிறது. மகப்பேறு இறப்பு விகிதம் பாதிக்கும் குறைந்து இருப்பது பெரிய அளவிலான சாதனையாக உள்ளது.

இதில் செவிலியர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது. கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 பேரில் 2,146 செவிலியர்களுக்கு ஏற்கனவே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் 390 பேர் பணிக்கு வரவில்லை. இந்நிலையில் மீதமிருந்த 719 பேருக்கு வரும் 13ம் தேதி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருக்கிறது.

திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த 6 செவிலியர் கல்லூரிகளும் உலகத்தரத்திற்கு இணையாக கட்டமைப்பு மட்டுமல்ல, கல்வித் தரத்திற்கும் இணையான வகையில் உருவாக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: