பாஜவின் முழுநேர அடிமை அதிமுக மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

 

சென்னை: பாஜவின் முழுநேர அடிமையாக அதிமுக மாறிவிட்டது. மோடியின் முரட்டு அடிமையாக எடப்பாடி உள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமுமுக அமைப்பின் மாணவர் அணியான சமூக நீதி மாணவர் இயக்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. மாநாட்டிற்கு தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறந்த கல்வியாளர் விருதுகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: என்னுடைய பொது வாழ்க்கையில் நான் முதன்முறையாக ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது எதற்காக தெரியுமா? ஒன்றிய அரசு அப்போது கொண்டு வந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்தை எதிர்த்து, அந்த சட்ட நகலை கிழித்ததற்காக முதன்முதலாக கைதானவன் நான்.

இதை நான் என்றைக்கும் பெருமையாகச் சொல்வேன். இன்று மாணவர்களுக்கு திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஓர் அரசு ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கிறது, முதல்வர் ஏன் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார், எல்லாரும் படிக்க வேண்டும் என்று நம்முடைய முதல்வர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார். எல்லாரும் முன்னேற வேண்டும் என்றுதான் இந்த திட்டங்களை எல்லாம் முதல்வர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

ஆனால், ஒன்றிய பாசிச பாஜ அரசு என்ன செய்கிறது, அவர்களின் கொள்கை யாரும் படிக்கக் கூடாது என்பதுதான். குறிப்பாக சங்கிகளுக்கு, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, குறிப்பாக சிறுபான்மையின மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்று ஒன்றிய அரசு, சங்கி கூட்டம் நினைக்கிறது. அதனால்தான் சிறுபான்மையின மாணவர்களுக்காக கொடுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையைக் கூட இன்று ஒன்றிய அரசு நிறுத்திவிட்டார்கள்.

இந்த அநீதியை முதல்வர் கடுமையாக எதிர்த்தார். எதிர்த்ததோடு மட்டும் நிற்கவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய சுமார் ஒரு லட்சம் சிறுபான்மையின மாணவருக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். இதுதான் உண்மையான சமூக நீதி அரசு.

ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் சாதி மத பாகுபாட்டை தடுக்கச் சமீபத்தில் யு.ஜி.சி சில விதிமுறைகளைக் கொண்டு வந்தது. ஆனால், ஒன்றிய பாஜ அரசு அதை எதிர்த்தார்கள். நீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை வாங்கிவிட்டார்கள். ஆனால், அந்த யு.ஜி.சி விதிமுறைகள் அவசியம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீங்கள் யோசித்துப் பாருங்கள், இங்கு இருக்கக்கூடிய அடிமைக் கூட்டம். அடிமைக் கூட்டத்திற்கு இதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. ஏனென்றால், பாசிச பாஜவின் முழுநேர அடிமையாக அதிமுக மாறிவிட்டது. அதில் இப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மோடியின் முரட்டு அடிமையாகவே மாறிவிட்டார்.

சிறுபான்மையின மக்களுக்கு திமுகவும், திமுக அரசும் என்றைக்குமே பாதுகாப்பு அரணாக நிற்கும். உங்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க திமுகவும், திராவிட மாடல் அரசும் காத்துக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையின மக்கள் எப்போதும் போல திமுகவிற்கு துணையாக இருக்க வேண்டும்.

நம் கூட்டணி குறைந்தது 200 இடங்களில் வென்று காட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு. நாம் ஒற்றுமையுடன் உழைத்தோம் என்றால் 200 அல்ல, 200க்கும் அதிகமான தொகுதிகளில் திமுகவின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வென்று காட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘மதுரையில் சங்கிகள் கலவரம் செய்ய முயற்சித்தபோது ஆதரவு தந்தவர் எடப்பாடி’

‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எடப்பாடி என்ன சொன்னார். “சிறுபான்மையின மக்களே இந்த முறை எங்களை நம்புங்கள், நாங்கள் எந்த காலத்திலும் பாஜவோடு மீண்டும் கூட்டணி வைக்க மாட்டோம்’’ என்று சொன்னாரா இல்லையா? ஆனால், இன்று கூட்டணி வைத்ததோடு மட்டும் நிற்கவில்லை. சமீபத்தில் மதுரையில் நடந்த விஷயம் உங்களுக்கு தெரியும்.

சங்கிகள் மதுரையில் கலவரம் செய்ய முயற்சி செய்தபோது, அதற்கு ஆதரவு குரல் கொடுத்தவர்தான் எடப்பாடி. பாசிச கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இன்று ஒரு அடிமை போதவில்லை என்று புதிய அடிமைகளுக்கு வலை விரித்துத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இப்படிப்பட்ட பாசிஸ்ட்களையும் அடிமைகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் சேர்ந்து வீழ்த்தியாக வேண்டும்’’

Related Stories: