ஒன்றிய பாஜ அரசை கண்டித்து 12ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்: தமிழ்நாடு ஐஎன்டியுசி அழைப்பு

சென்னை: தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் மு.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராடி, சிறை சென்று தொழிலாளர்கள் சட்டங்களை சுதந்திரத்திற்கும் முன்பும், பின்பும் உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் சட்டங்களில் 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜ அரசு சட்டங்களாக்கியுள்ளது. இதன் மூலம் 80 சதவீததற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சட்ட வரம்புக்கு வெளியே தள்ள உள்ளது. இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை கொண்டு வந்த தொழிலாளர் விரோத பாசிச ஒன்றிய பா.ஜ. அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் 12ம் தேதி பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாடு ஐஎன்டியுசி நிர்வாகிகள் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆங்காங்கே நடக்கும் போராட்டத்திலும் நமது தோழமை தொழிற்சங்களோடு சேர்ந்து பெரும் திராளாக பங்கேற்க வேண்டும். பாஜ அரசுக்கு தொழிலாளர்களின் ஓட்டுமொத்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டுவோம். 12ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: