விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

*அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் உற்சாகம்

சேலம் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூர் மற்றும் கொல்லிமலையில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், தொடர் மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பனிப்பொழிவு, சாரல் மழை என ஏற்காடு இதமான இயற்கை சூழலில் காட்சியளித்தது. தற்போது அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ‘ஜில்’ கிளைமேட்டும், பகல் நேரத்தில் சுளிர் வெயிலும் காணப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள், காலை முதலே ஏற்காட்டில் குவிய துவங்கினர். அண்ணாபூங்கா, வியூபாயின்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, ரோஜா பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டியது.

படகு இல்லத்தில், நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் 49வது கோடை விழா மலர் கண்காட்சிக்கான பணிகள் தொடங்கி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து 4,000 டேலியா நாற்றுகள் கொண்டுவரப்பட்டு அண்ணா பூங்காவில் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.

மேட்டூர்: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான மேட்டூருக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள டெல்டா கால்வாயில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர், அணையின் காவல் தெய்வமான முனியப்பனை வழிபட்டனர். தொடர்ந்து, அங்குள்ள கடைகளில் மீன் உணவுகளை குடும்பத்தினருடன் சுவைத்தனர். பின்னர், அணை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடி பொழுதை போக்கி மகிழ்ந்தனர். மேலும், அணையின் பவள விழா நினைவு கோபுரத்திற்கு சென்று அணையின் முழுமையான அழகை கண்டு ரசித்தனர்.

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும், நேற்று பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஆயில் மசாஜ் செய்து கொண்டு அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். பின்னர், குடும்பத்துடன் பரிசல் சவாரி செய்து, காவிரி ஆறு மற்றும் அருவிகளின் அழகை அருகாமையில் சென்று கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், அங்குள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது. ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், ஊர்க்காவல்படையினர் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, ஒகேனக்கல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொல்லிமலை: நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சில நாட்களாக பகலில் வெயில் அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

கொல்லிமலையில் மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் தண்ணீர் குறைவாக கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர், அங்குள்ள பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் போன்றவற்றை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, தண்ணீர் குறைவாக உள்ள வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Related Stories: