தமிழகத்தில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது: 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

 

* 5% முதல் 7% வரை அதிகரிப்பு
* வருடாந்திர, மாதம் பாசும் எகிறியது

சென்னை: தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிற சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும். மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டண உயர்வு காலமும் மாறுபடுகிறது.

1992ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நள்ளிரவு 12 மணி முதல் மொரட்டாண்டி, பல்லிக்கொண்டா, பெடகல்லுப்பள்ளி (வாணியம்பாடி), கானியூர், கிருஷ்ணகிரி, பரனூர், ஆத்தூர் (திண்டிவனம்), மாதூர், நல்லூர், சூரப்பட்டு, வானகரம், ஸ்ரீபெரும்புதூர் (பென்னலூர்), சென்னைசமுத்திரம், எஸ்.வி.புரம், பட்டரைப்பெரும்புதூர், கல்லக்குடி, மணகத்தி, குருங்குடி (வீராணநல்லூர்), நாங்கிலிகொண்டான்,

காரியமங்கலம், நாகம்பட்டி, கோத்தட்டை, கரகத்தஹள்ளி, கங்காரம்பாளையம், செலியமேடு, கீழ்குப்பம், பொன்னாலகரம், வள்ளம், ஏனம்காரியந்தல், தென்னமாதேவி, கதவாணி, வேலம்பட்டி, மதுக்கரை, எச். புதுப்பட்டி, பொங்கலூர், வலவந்தாங்கோட்டை, கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி, பூதகுடி (விராலிமலை), சிட்டம்பட்டி (மேலூர்), லெச்சுமணப்பட்டி, லெம்பலகுடி, கோடிக்கோட்டை, வெண்ணாத்தூர், பழைய கந்தர்வக்கோட்டை, செண்பகம்பேட்டை, திருப்பாச்சேதி வடக்கு, போகலூர், வாகைக்குளம், திருப்பதிசாரம், உப்பார்பட்டி, சத்திரப்பட்டி, புதூர், கோவில்வேணி, வெம்புக்குடி, மணம்பாடி, புதூர்பாண்டியபுரம், எலியார்பதி, வலவந்தாங்கோட்டை ஆகிய 60 சுங்கச்சாவடிகள் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

இந்த 60 சுங்கச்சாவடிகளிலும் 5% முதல் 7% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கார், ஜீப், வேன் போன்ற லேசான வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரையும், வருடாந்திர பாஸ் கட்டணம் ரூ.3,000லிருந்து ரூ.3,075 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

5 ஆண்டில் 18,865 கோடி வசூல்
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 2021-26 வரை ரூ.18,865.14 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் ரூ.2,649.35 கோடி, 2022-23ம் ஆண்டில் ரூ.3,758.23 கோடி, 2023-24ம் ஆண்டில் ரூ.4,157.96 கோடி, 2024-25ம் ஆண்டில் ரூ.4,300 கோடி, 2025-26ம் ஆண்டில் பிப்ரவரி வரை ரூ.4,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி – தோப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.275.13 கோடியும், குறைந்தபட்சமாக மீன்சுருட்டி – சிதம்பரம் பிரிவில் உள்ள குருங்குடி சுங்கச்சாவடியில் ரூ.2.55 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: