துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: வரும் 15ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்

 

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. நேர்முகத்தேர்வு வருகிற 15ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில், துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய பணியிடங்கள் அடங்கும்.

அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 86 ஆயிரம் 128 பேர் எழுதினர். தொடர்ந்து ஆகஸ்ட் 28ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் தற்காலிகமாக 1801 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான குரூப் 1 மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 1, 2ம் தேதி, 3ம் தேதி தேதி, 4ம் தேதி வரை நடந்தது. சென்னை கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி தி முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி, தி.நகர் கர்நாடக சங்கீதா மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சென்னையில் 18 இடங்களில் தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடந்தது. இத்தேர்வை 1568 பேர் மட்டுமே எழுதினர்.

இந்நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 1 மெயின் தேர்வுக்கு 1,801 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 1568 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கான 160 தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in எனும் இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: