இலவசம் என்ற வார்த்தையை அரசியலாக்க முயற்சி; தேர்தல் அறிக்கை காப்பியா? அதிமுக சொல்வது வேடிக்கை: எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி

 

சென்னை: தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கிறார்கள் என்று அதிமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று கனிமொழி பதிலடி தந்து உள்ளார். திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: கடந்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுகவின் சார்பில் 505 தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் 404 வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல்வேறு மகத்தான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தந்திருக்கிறார்.

மீதமுள்ள 101 வாக்குறுதிகளில், 37 வாக்குறுதிகள் ஒன்றிய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு தான் நிறைவேற்ற முடியும் என்ற சூழல் உள்ளது. 64 திட்டங்கள் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் எதிர்ப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இருப்பினும், இவை தவிர்த்து மற்ற அத்தனை வாக்குறுதிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது என்னென்ன திட்டங்கள் நடைமுறையில் உள்ளன, இந்த திராவிட மாடல் அரசு எந்தெந்த திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது கூட தெரியாமல் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தித் தருவோம் என்று நாங்கள் அறிவித்த பிறகு, அதனை தொடர்ந்து தாங்களும் 2,000 ரூபாய் கொடுப்போம் என்று ஒரு தேர்தல் அறிக்கையை எழுதிவிட்டு, மற்றவர்கள் காப்பி அடிக்கிறார்கள் என்று அதிமுக சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று கணக்கெடுத்தால், அந்தப் பட்டியல் மிக நீண்டு கொண்டே போகும்.

இலவசங்கள் என்ற வார்த்தையை திரும்ப திரும்பப் பயன்படுத்தி, அதனை அரசியலாக்க ஒரு தரப்பினர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இலவசம் என்று பார்க்காமல், சமூக முதலீடு மற்றும் சமூக நீதிக்கான முன்னெடுப்பாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக நீதி நிலைநாட்டப்படுவதை விரும்பாதவர்கள் மட்டுமே இதனை விமர்சனம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: