சென்னை: தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வாங்க தெரியாத தவெக பால்வாடி கட்சியினர் என்று சேகர்பாபு பதிலடி கொடுத்து உள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் துறைமுகம், எழும்பூர், திருவிக நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட தொகுதி மற்றும் வட்ட தேர்தல் பணிமனைகள் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் மேற்கு பகுதி தேர்தல் பணிமனை, கொண்டித்தோப்பு 54, 54 ‘அ’ வட்ட தேர்தல் பணிமனைகள் மற்றும் சவுகார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள 57, 57 ‘அ’ வட்டத் தேர்தல் பணிமனைகளை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், துறைமுகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பி.கே.சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறியதாவது: திமுக ஆட்சியில் இருந்தால் மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் சரி மக்களோடு இரண்டற பயணிப்பவர்கள், களம் யாருக்கு சாதகமாக உள்ளது என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம். தான் திருடி பிறரை நம்பா என்ற வார்த்தையைத்தான் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்ல வேண்டும். கூவி கூவி மற்ற கூட்டணி கட்சிகளை அழைத்தும், யாரும் வராததால் திமுகவை விஜய் விமர்சனம் செய்யத்தான் செய்வார்.
செங்கோட்டையன் எப்படிப்பட்ட ஜாம்பவான் விஜய்க்கு பாடிகாட்டாக செல்லும் நிலையில் புலம்பி வருகிறார். பிரசாரத்திற்கு அனுமதி கூட எப்படி வாங்க வேண்டும் என்று தெரியாத பால்வாடி விஜய் கட்சியினர். அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அதன் பின் சித்தப்பா என்று அழைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
