அண்ணாமலை விசுவாசியா? நயினார் விசுவாசியா?தளியில் தள்ளாடும் பாஜ

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று தளி. 1977ல் தளி தொகுதி உருவானது. அந்தாண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட டி.ஆர்.ராஜாராம்நாயுடு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1980ல் நடந்த தேர்தலிலும் அவரே வெற்றியை தக்க வைத்தார். 1984ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.வி.வேணுகோபால் வெற்றி பெற்றார். 1989ல் ஜனதா கட்சி தே.சி.விஜயேந்திரய்யா வெற்றி பெற்றார்.

1991ல் காங்கிரஸ் வேட்பாளர் மு.வெங்கடராமரெட்டி வென்றார். 1996ல் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.ராஜாரெட்டி வெற்றி பெற்றார். 2001ல் பாஜ வேட்பாளர் கே.வி.முரளிதரன் வெற்றி பெற்றார். 2006ல் சுயேட்சையாக போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 2011ல் இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன் வெற்றியை தக்க வைத்தார். 2016ல் திமுக வேட்பாளர் தளி பிரகாஷ் வெற்றி பெற்றார். 2021ல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன் வெற்றி பெற்று 3வது முறை இந்த தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

இப்படி பல்வேறு கட்சிகள் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்த தளி தொகுதியை இந்தமுறை, பாஜ குறிவைத்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளரான அமர்பிரசாத் ரெட்டிக்கு இந்த தொகுதியில் வாய்ப்பளித்து களத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆனால் பின்புலத்தில் அண்ணாமலை-நயினார் இடையிலான ஈகோ யுத்தம் மறைந்து நிற்பதாக கூறுகின்றனர் உள்ளூர் பாஜவினர்.

இதுகுறித்து தளி தொகுதி பாஜ நிர்வாகிகள் கூறியதாவது: என்டிஏ கூட்டணியில் தளி தொகுதியை பாஜவிற்கு ஒதுக்குவது 95 சதவீதம் உறுதியாகி விட்டது. தற்ேபாது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜ தலைவராக உள்ள தேன்கனிக்கோட்ைட நாராயணன் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இவர், நயினார் தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்பட்டதும் பொறுப்புக்கு வந்தவர். மேற்கு மாவட்ட தலைவரானவுடன் பழைய நிர்வாகிகள் அனைவரையும் மாற்றினார். இது அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களான பழைய நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு துருப்புசீட்டாக கிடைத்தவர் தான் அண்ணாமலை கேங்கை சேர்ந்த அமர்பிரசாத்ரெட்டி.

பழைய நிர்வாகிகள், புதிய மாவட்ட தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அமர்பிரசாத்ரெட்டியை இங்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தெலுங்குபேசும் மக்கள் அதிகம் நிறைந்த தொகுதி. எனவே, தெலுங்கரான நீங்கள் தான், இங்கு போட்டியிடவேண்டும் என்று அவரை உசுப்பேற்றி விட்டனர். இதில் பரவசமான அமர்பிரசாத்ெரட்டி, தற்ேபாது தளியை குறிவைத்து வாலண்டரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதை மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், மாநில தலைவர் நயினாரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் தளியில் போட்டி என்ற அமர்பிரசாத் ரெட்டியின் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளது. உள்ளூரை சேர்ந்த நாராயணன் ஆதரவாளர்களும் முடிந்தவரை சமாளித்து வருகின்றனர். இதில் தளியில் சீட்டு அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டிக்கா? அல்லது நயினாரின் ஆதரவு பெற்ற நாராயணனுக்கா? என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரியவரும். ஆனால் சீட்டு யாருக்கு கிடைத்தாலும், கோஷ்டி மோதல் ஓட்டுக்களை சின்னாபின்னமாக்கும் என்பது மட்டும் உண்மை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related Stories: