ஹராரே: 19 வயது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 16வது இளையோர் 19 வயது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே, நமிபியாவில் கடந்த ஜன. 15ம் தேதி துவங்கியது. இதன் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் நேற்று ஹராரே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும் மற்றொரு ஓபனர் வைபவ் சூரியவன்சியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. இவர் கேப்டன் ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து 55 பந்துகளில் 8 போர், 8 சிக்சருடன் சதமடித்தார். 18.6 ஓவரில் ஸ்கோர் 162 ஆக இருந்த போது ஆயுஷ் மாத்ரே 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட்டத்தின் வேகத்தை சற்றும் குறைக்காத வைபவ் சூரியவன்சி பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாவும் பறக்க விட்டார்.
இவரை அவுட்டாக்க இங்கிலாந்து அணியும் பவுலர்களை மாற்றி, மாற்றி வீச செய்தும் பலன் ஏதுமில்லை. தொடர்ந்து காட்டிய அதிரடி ஆட்டத்தால் வைபவ் சூரியவன்சி 72 பந்தில் 13 போர், 13 சிக்சருடன் 155 ரன்னை கடந்தார். பின்னர் இறுதியாக 25.3 ஓவரில் ஸ்கோர் 251 ரன்னை எட்டிய போது இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூரியவன்சி 80 பந்துகளில் 15 போர், 15 சிக்சருடன் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் திரிவேதி 32 ரன், மல்கோத்ரா 30 ரன், அபியான் குண்டு 40 ரன், அம்பிரிஷ் 18 ரன்னில் அவுட் ஆக கனிஷ்க் சவுகான் 37 ரன்னுடன் களத்தில் நிற்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மின்டோ 3 விக்கெட், மோர்கன், கிரின் தலா 2 விக்கெட் எடுதத்னர்.
அடுத்து 412 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கி விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பால்கானர் 115 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் 6வது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது. ஆட்டநாயகன், தொடர் நாயகள் விருதுகளை சூரியவன்சி தட்டிச் சென்றார்.
* பதினான்கு வயதில் பலப்பல சாதனைகள்
பீகாரை சேர்ந்த 14 வயதாகும் வைபவ் சூரியவன்சி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 175 ரன்கள் குவித்து பல சாதனைகளை உடைத்தெறிந்து விட்டார். கடந்த 2022ம் ஆண்டு 19 வயது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உகாண்டாவிற்கு எதிராக 69 பந்துகளில் சதமடித்த இந்திய அணி வீரர் ராஜ் அங்கத் பாவா மற்றும் அதே தொடரில் இலங்கைக்கு எதிராக 63 பந்துகளில் சதமடித்த பாகிஸ்தானின் காசிம் அக்ரம் ஆகியோரது சாதனையை வைபவ் சூரியவன்சி 55 பந்துகளில் சதமடித்து முறியடித்தார். இந்த தொடரில் ஜப்பானுக்கு எதிராக 51 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரேலிய அணி வீரர் வில் மலாஜ் முதலிடத்தில் உள்ளார்.
* அடுத்து இதே தொடரில் இங்கிலாந்து வீரர் பென் மேயஸ் இதே மைதானத்தில் ஸ்காட்லாந்திற்கு எதிராக 98 பந்துகளில் 150 ரன்கள் எடுத்திருந்தார். அதையும் வைபவ் சூரியவன்சி 71 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து முறியடித்தார். 19 வயது உலகக்கோப்பை இறுதி போட்டியில் 150 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் மற்றும் 175 ரன் எடுத்து டாப் ஸ்கோரர் என்ற பெருமையையும் வைபவ் சூரியவன்சி பெற்றார்.
* இந்த தொடரில் வைபவ் சூரியவன்சி 439 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்தது மட்டுமின்றி இந்தியா வீரர்களான 2020ல் 400 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2024ல் 397 ரன்கள் எடுத்த உதய் சஹாரன், 2018ல் 372 ரன்கள் எடுத்த சுப்மன் கில் ஆகியோரை முந்தி 2வது இடம் பிடித்துள்ளார். 2004ல் ஷிகர் தவான் 505 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
* 19 வயது உலகக்கோப்பை வரலாற்றில் 15 சிக்சர்கள் அடித்து வைபவ் சூரியவன்சி முதலிடத்தை பிடித்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் மைக்கேல் ஹில் 12 சிக்சர், கிரெய்க் சிம்மன்ஸ் 11 சிக்சருடன் முதல் 2 இடங்களில் இருந்தனர்.
* 19 வயது உலகக்கோப்பை வரலாற்றில் 400 ரன்களை தொட்ட முதல் அணியும் இந்திய அணியே ஆகும்.
