மகளிர் பிரீமியர் லீக்கில் 2வது முறையாக சாம்பியன்; ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்: ஸ்மிருதி மந்தனா உருக்கம்

 

வதோதரா: 2026ம் ஆண்டு மகளிர் பிரிமீயர் லீக் இறுதிபோட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு லீ 37, வோல்வார்ட் 44, கேப்டன் ஜெமிமா 57, ஹென்ரி 35 பங்களிப்பில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. கடின இலக்கை சேஸ் செய்த பெங்களூரு அணி மந்தனா மற்றும் ஜியார்ஜியாவின் 165 ரன் பார்ட்னர்ஷிப் உதவியுடன் 19.4 ஓவரில் 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 2வது முறையாக கோப்பையை முத்தமிட்டது.

தொடர் நாயகியாக சோபி டிவைனும், ஆட்ட நாயகியாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டனர். கோப்பையை கைப்பற்றிய பின் மந்தனா கூறியதாவது: சிறந்த ரசிகர்கள் யார் என்று என்னிடம் யாராவது கேட்டால், ஆர்சிபியை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் என கூறுவேன். எந்த அணியுடன், எங்கு மோதினாலும் எங்களுக்கு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுப்பதற்காகவே மைதானத்தில் அங்கம் வகிப்பவர்கள் அவர்கள். அதனால் ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற முயற்சிப்போம். அது தற்போது கோப்பையை பெற்று தந்துள்ளது.

3 ஆண்டுகளில் 3 கோப்பைகள் (ஆர்சிபி ஆடவர் அணி 2025 ஐபிஎல் இல் கோப்பை வென்றது) என்பது ஆர்சிபி அணிக்கு பொன்னான தருணமாகும். பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதை டாஸ் போடும்போதே கணித்தோம். எனினும் 200 பிளஸ் ரன்னை சேஸ் செய்தது மாயாஜாலம் போல் உள்ளது. இந்த வெற்றியில் அணியில் உள்ள அனைவருக்கும் பங்கும் உள்ளது. எனினும் நேற்றைய இரவில் நாயகி ஜியார்ஜியாவால் தான். கடந்த சில நாட்களாகவே கடுமையான பயிற்சியை அவர் மேற்கொண்டார். அதற்கு தக்க பலன் கிடைத்துள்ளது. இதுபோல் வீராங்கனைகள் பந்துகளை சிதறடித்து கொண்டிருக்கும்போது சிக்கனமாக பந்துவீசுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

ஆனால் அதை லாரன் பெல் அருமையாக செய்தார். அந்த வகையில் 4.75 எகானமியில் பந்துவீசிய பெல் ஒரு அற்புதமான பந்துவீச்சு வீராங்கனை. கோப்பையை நான் கைகளில் ஏந்தியபோது எனது அணி வீராங்கனைகளின் அத்தனை பேர் முகத்திலும் ஆனந்தத்தை கண்டேன். இந்த தருணத்திற்காக எங்கள் அணி பெரும் சவால்களை கடந்து வந்துள்ளது. ஆர்சிபி ரசிகர்களுக்கு காலம் முழுவதும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். இந்த கோப்பை உங்களுக்கு, நாங்கள் கொடுக்கும் அன்பு பரிசு. கடந்த 2024ம் ஆண்டு இதை நான் கூறினேன். இன்று மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் ‘ஈ சாலா கப் நமதே’ என்றார்.

Related Stories: