மேட்டூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா

*சிசிடிவி கேமராவில் சிக்கியது; பொதுமக்கள் அச்சம்

மேட்டூர் : கொளத்தூர் வனப்பகுதி மற்றும் குரும்பனூர் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் மற்றும் மேட்டூர் வனச்சரகத்தில் மான், முயல், யானை மற்றும் ஏராளமான பறவைகள் உட்பட பல வகை உயிரினங்கள் வசிக்கின்றன. சில நேரங்களில் சிறுத்தை மற்றும் காட்டு மாடு உள்ளிட்டவை வனப்பகுதியில் இருந்து ெவளியே வருகின்றன.

இந்நிலையில், மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூரில், குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருகின்றன. கடந்த 30ம் தேதி, நிலவுக்கல் கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டின் வௌியே ஒரு கரடி வந்து சென்றுள்ளது. இது வீட்டின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கண்ட கிராம மக்கள், இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில், கடந்த 2 நாட்களாக நிலவுக்கல் பகுதியில் வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பகலில் கரடிகள் நடமாட்டம் தென்படவில்லை. இரவு நேரங்களில் மட்டுமே கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வதை வனத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பகலில் கரடிகள் நடமாட்டம் தென்படவில்லை. எனவே, தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணித்து கரடியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: