பாடலுடன் ஆடி, புகாருக்குள் சிக்கிய கட்சி எது தெரியுமா, நடிகரின் புதிய கட்சி தான். வாய்ஜாலம் போட்டு பாடல் பாடியதால் தற்போது புகாரில் சிக்கியிருக்காங்க…. தமிழ்க்கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படுபவர் முருகன். கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழாவில் அவரது பாடலையே மெட்டுப் போட்டு பாடியதால் தற்போது புகாருக்கு ஆளாகி இருக்கிறார்கள் நடிகரும், அவரது கட்சி நிர்வாகிகளும்.
நெல்லை டவுனைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் நெல்லை மாநகர காவல் துறையிடம் அளித்த புகாரில், ‘‘முருகன் பாடலை கேலி செய்து மத உணர்வை புண்படுத்தி, மத மோதலை தூண்டி சட்டம், ஒழுங்கு பிரச்னைக்கு வழி வகுக்கும் வகையில் முருகர் பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது. ‘மருதமலை மாமணியே’ என்ற பிரசித்தி பெற்ற பாடலில் முருகப்பெருமானை போற்றும் வரிகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் அந்தப் பாடலை திரித்து ‘வருவாய் குகனே’ என்பதற்கு பதிலாக ‘வருவாய் எங்கள் தளபதியே! வருவாய் எங்கள் தமிழக வெற்றிக் கழகமே!’ என பாடியது முருக பக்தர்களாகிய எங்களை வேதனைக்குள்ளாக்கி விட்டது. முருக பக்தர்கள் மனம் புண்படும்படி முருகன் பாடலை கேலி செய்து மத உணர்வை புண்படுத்தி சட்டம், ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுத்த பாடகர் வேல்முருகன், அவருக்கு தூண்டுதலாக இருந்த தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் துவங்கும் முன்பே புகாருக்கு ஆளாகி இருக்கிறது நடிகரின் கட்சி. நடிகர் கட்சின்னாலும் பாடலை மாற்றிப் பாடலாமா….தப்பு என்றால் யார் செஞ்சாலும் தப்பு தான். நடிகராக இருந்தாலும் நியாயம் ஒன்று தான் என்கின்றனர் முருக பக்தர்கள். புகாரை பெற்றுக் கொண்ட நெல்லை காவல் துறை, வழக்குப் போடலாமா…என சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது.
இதேபோல், விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜ பிரசார பிரிவு மாநிலச் செயலாளர் சுரேஷ் தலைமையில் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்திடமும், சேலம் கிழக்கு மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் அஜீத் (எ) அஜீத் சாக்கோ மற்றும் பாஜ நிர்வாகிகள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நேற்று புகார் அளித்துள்ளனர். இதேபோல, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அருணாசலம் புகார் அளித்துள்ளார்.
* ஆரம்பிச்சுது பஞ்சாயத்து
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்தனர். இதையொட்டி அண்ணா சிலை அமைந்துள்ள பகுதியில் பல்வேறு கட்சியினர் தங்களது கட்சியின் கொடியினை கட்டியிருந்தனர். அப்போது அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த இடத்தில், அமமுகவினர் சிலர் தங்களது கட்சிக் கொடியை கட்ட முயன்றனர்.
இதற்கு அதிமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த இரு கட்சியின் நிர்வாகிகளும் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் இப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
