பொன்னேரியில் கால்வாய் அடைப்பால் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

பொன்னேரி: பொன்னேரியில், கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் ஆறாக பாய்ந்தோடும் கழிவு நீரால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. ஆங்காங்கே பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, அகத்தீஸ்வரர் கோயில் சாலையில், கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் ஆறாக பாய்ந்தோடுகிறது. வீடுகளில் இருந்து கால்வாயில் வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் தூர்ந்து போன கால்வாயில் செல்ல
வழியில்லாமல் சாலையில் தேங்கி ஆறு போல பாய்ந்தோடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் செல்லும் மக்கள் அனைவரும் முகம் சுழித்தபடி மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பாய்ந்தோடும் கழிவு நீரில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் மீது சிதறி வாக்குவாதம் ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் பாய்ந்தோடும் கழிவு நீரை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: