கொழும்பு: இலங்கை ஏ அணிக்கு எதிரான பயிற்சி டி20 போட்டியில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் 7ம் தேதி துவங்கவுள்ள நிலையில் கொழும்பு நகரில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை ஏ- ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை ஏ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர்கள் சினெத் ஜெயவர்தனா 9, துல்நித் சிகெரா 20 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
ஓமன் வீரர்களின் அட்டகாச பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பின் வந்த இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்வந்தோரில் புலிந்து பெரேரா 9, பவன் சந்தேஷ் 3, சஹன் கோசலா 21, கவிஜா கமகே 12, வனுஜா சஹன் 29, சச்சிதா ஜெயதிலகே 9 கேப்டன் லஹிரு சமர்கூன் 5 ரன்னில் அவுட்டாகினர். அதனால், இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜெய் ஒடெரா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
அதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் துவக்க வீரர் ஆமீர் கலீம், இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்து, 47 பந்துகளில் 3 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 80 ரன் குவித்தார். பின் வந்த டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியபோதும், விநாயக் சுக்லா (24 பந்து, 39 ரன்) சிறப்பாக ஆடி தனது அணியை கரை சேர்த்தார். அதனால், 18 ஓவர் முடிவில் ஓமன், 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
