யு19 உலக கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் 4ம் தேதி ஆப்கனுடன் இந்தியா மோதல்: வெற்றிபெற ஆசை என கேப்டன் பேட்டி

புலவாயோ: 16வது யு19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 6 சுற்றில் நேற்று நடந்த கடைசி போட்டியில் குரூப் 2 பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 252 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன் அடித்தார். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவரில் 194 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பேட்டிங்கில் 35 ரன் அடித்ததுடன் பவுலிங்கில் 10 ஓவரில் 30 ரன் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் கனிஷ்க் சௌஹான் ஆட்டநாயகன் விருது பெற்றார். குரூப் 2 பிரிவில் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் 2 இடம் பிடித்த இந்தியா, இங்கிலாந்து, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

நாளை புலவாயோவில் நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதுகின்றன. வரும் 4ம்தேதி ஹராரேவில் 2வது அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்-இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் வரும் 6ம்தேதி ஹராரேவில் பைனலில் மோதும்.

இதனிடையே நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மத்ரே கூறியதாவது: பேட்டிங்கில் நல்ல தொடக்கம் இருந்தது, ஆனால் நடுவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. கனிஷ்க் சௌஹான் அற்புதமாக பேட்டிங் செய்தார். வேதாந்த் வலைகளில் நன்றாக பேட்டிங் செய்தார், அதனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. முதல் 25 ஓவரில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினர். அரையிறுதியில் வெல்ல வேண்டும் என்பதுதான் ஆசை’’ என்றார்.

Related Stories: