மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் முடிந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 1600 புள்ளிகள் உயர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த 38 வயது ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 1600 புள்ளிகள் பெற்ற அவர், ஆடவர் டென்னிஸ் ஏடிபி தரவரிசை பட்டியலில் 1600 புள்ளிகள் உயர்ந்து, 13650 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆஸி ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவிய இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 1200 புள்ளிகள் குறைந்து, 10300 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் தொடர்கிறார். பைனல் வரை முன்னேறிய ஜோகோவிச் 500 புள்ளிகள் உயர்ந்து, 5280 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளார். 3ம் இடத்தில் இருந்த ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 500 புள்ளிகள் இழந்து 4605 புள்ளிகளுடன் ஒரு நிலை சரிந்து 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டி 5, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6, அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் 7, கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலிசியாமே 8, அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் 9, ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் புப்லிக் 10ம் இடங்களை பெற்றுள்ளனர்.
* ஆஸி ஓபன் தோல்வியால் பாதிப்பில்லை முடிசூடா அரசியாக முதலிடத்தில் சபலென்கா: 3000 புள்ளிகள் முன்னிலையுடன் அசத்தல்
ஆஸி ஓபன் டென்னிஸ் முடிவில், மகளிருக்கான டபிள்யுடிஏ தரவரிசை பட்டியலில், ஆஸி ஓபனில் 2ம் இடம் பிடித்த, பெலாரசை சேர்ந்த அரீனா சபலென்கா 10990 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், 7978 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் தொடர்கிறார். ஆஸி ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா, 7610 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 3ம் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா மாற்றமின்றி 4, அந்த நாட்டின் கோகோ காஃப் 2 நிலைகள் சரிந்து 5ம் இடத்தை பிடித்துள்ளனர். தவிர, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6, ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 7, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி 8வது இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர். மேலும், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் ஒரு நிலை உயர்ந்து 9, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 2 நிலைகள் உயர்ந்து 10ம் இடங்களை பிடித்துள்ளனர்.
