மல்லசமுத்திரம், பிப்.4: காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச தேர்திருவிழாவில் பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் தற்காலிக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது. சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவின்போது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்காக ஆங்கிலேயர் காலத்திலிருந்து வருடம்தோறும் திருவிழா நீதிமன்றம் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜன் தலைமையில் நீதிமன்றம் கூடியது. இதில், பொது இடத்தில் மது அருந்திய 5 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது.
