சாக்கடை கால்வாய் கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நாமகிரிப்பேட்டை, மார்ச் 17: வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னக்கல் ஊராட்சி, வடுகம்பாளையம் 6வது வார்டு வடக்காடு விநாயகர் கோவில் தெரு பகுதியில், சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திறந்த வெளியில் தேங்கி நிலை உள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலம் வந்தால் மழைநீருடன் கலந்த கழிவுநீர் தேங்கி, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுத்தாலும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை கண்டித்து, 30க்கும் மேற்பட்டோர் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த பிடிஓ.,க்கள் மலர்விழி, சுஜிதா ஆகியோர், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் சமாதானமடைந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: