குமாரபாளையம், மார்ச் 17: சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களிலும், குமாரபாளையம் நகராட்சியில் வரி வசூல் மையம் இயங்கும். எனவே நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி, வாடகை கட்டணங்களை, பொதுமக்கள் நிலுவையின்றி செலுத்தும் படி, நகராட்சி கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார். குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: நகராட்சிக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமை கட்டணம், வாடகை உள்ளிட்ட குத்தகை கட்டணங்களை நிலுவையின்றி வசூலிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. நகராட்சிக்காண கட்டணத்தை கியூஆர் கோடு மூலமோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். வரி செலுத்த வசதியாக நகராட்சி கணினி மையம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களிலும் திறக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் நகராட்சிக்கான கட்டணங்களை தாமதமின்றி செலுத்தலாம். வரி இனங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, உரிய காலத்தில் வரியினங்களை செலுத்தி, மேல் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
