திருமயத்தில் களைகட்டிய ஜல்லிக்கட்டு; 800 காளைகள் சீறி பாய்ந்தது

திருமயம்: திருமயம் அருகே இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் சீறி பாய்ந்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குலமங்களம் மலையகோயில் அருகே தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக புதுகை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்கள், பார்வையாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர்.

காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு மிக்சி, மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. பனையபட்டி போலீசார் உள்ளிட்ட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு களத்தில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை திருமயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories: