தேர்தல் பரப்புரைக்கு யார் அனுமதி தருகிறார்கள் என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பரப்புரைக்கு யார் அனுமதி தர வேண்டும் என விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். செயலியில் பதிவு செய்தால் அனுமதி தானாகக் கிடைக்கும். இதனால் அரசுக்கும் விஜய் பரப்புரைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? பந்தல் அமைப்பது, எங்கு அமைப்பது என அனைத்து அனுமதியும் தேர்தல் ஆணையம் தான் தருகிறது.

முன்பெல்லாம் நிகழ்ச்சி நடத்த தேர்தல் ஆணையம் அலுவலகம் சென்று கடிதம் தர வேண்டும். அதற்கென்று தனியாக ஒரு அலுவலர் இருப்பார். ஆனால் தற்போது எளிதாக அனுமதி கிடைக்கிறது. 48 மணி நேரத்துக்கு முன்பு இல்லாமல் 20 மணி நேரம் அல்லது 18 மணி நேரத்துக்கு முன்பாக அனுமதி கோரினால் அனுமதி வழங்கப்படாது. இதற்கு திமுகவும், அரசும் எந்த வகையில் பொறுப்பேற்க முடியும்? தேர்தல் ஆணையம் அனுமதி பெற்ற பிறகு அரசு அலுவலர்கள் ஏதாவது தொந்தரவு தந்துள்ளனரா? என்று சொல்லச் சொல்லுங்கள். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: