தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு நாளை தேர்தல் முதன்முறையாக க்யூஆர் கோடு முறை அறிமுகம்: தேர்தல் அதிகாரி நீதிபதி கே.என்.பாஷா தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உறுப்பினர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகனகிருஷ்ணன், டி.செல்வம், எம்.வேல்முருகன், பிரிசில்லா பாண்டியன், இரா.கிரிராஜன் எம்பி உள்ளிட்டோரும் புதிதாக வழக்கறிஞர்கள் டி.பிரசன்னா, என்.விஜயராஜ், செ.ரூபன் உள்ளிட்ட 143 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவுற்றது.

இந்நிலையில், பார்கவுன்சில் தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரியும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே.என்.பாஷா மற்றும் பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் உயர் மட்டக்குழு உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் இ.ஓம்பிரகாஷ் ஆகியோர் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 30ம் தேதி பார்கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் 166 வாக்குச்சாவடி மையங்களும், புதுச்சேரியில் 2 மையங்களும் என மொத்தம் 168 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக க்யூஆர் கோடு முறையில் வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவுள்ளது. தேர்தல் மார்ச் 30ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்’’ என்றனர்.

Related Stories: