சேலம், ஜன.21: சேலம் அருகே ஆக்கிரமிப்பு எனக்கூறி இடிக்கப்பட்ட வீடுகளை, புதிதாக கட்டி தரக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த தண்ணீர் பந்தல் காட்டுக்கொட்டாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் தலைமையில் எங்கள் பகுதியில் இருந்த சில ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. அப்போது தவறுதலாக எங்களது வீடுகளையும் சேர்த்து இடித்துவிட்டனர். இதனால் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தவறுதலாக இடிக்கப்பட்ட 7 வீடுகளுக்கும் பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது குடியிருக்க இடமின்றி தவித்து வரும் எங்களுக்கு மீண்டும் புதிதாக வீடு கட்டித்தர வேண்டும்,’’ என்றனர்.
