காடையாம்பட்டி, ஜன.21: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த குண்டுக்கல் ஊராட்சி சிகலப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகலப்பட்டி பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த காடையாம்பட்டி தாசில்தார் நாகூர் மீரான், பிடிஓ பானுமதி, தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து குடிநீர் வசதி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
