புதுடெல்லி: அமலாக்கத்துறை அறிவிப்பாணைக்கு எதிரான அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர், அவரது மனைவி சுசிலா, மகன்களான தற்போதைய பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி உள்ளிட்ட அனைவரையும் திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2018ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில், கீழ் நீதிமன்றத்தின் விடுவிப்பு ரத்து செய்யப்பட்டு, விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை புதிய வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் மகள் இந்திரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி சொத்து, வங்கி கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றியது. மேலும், சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டும் அவர்களுக்கு அறிவிப்பாணை அனுப்பப்பட்டது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து ஐ.பெரியசாமி மற்றும் செந்தில்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து மனு திரும்பப் பெறப்பட்டது.
