ஒரே ஆண்டில் 8வது முறை; கருக்கு சாலையில்திடீர் ராட்சத பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்

 

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே சாலையில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். அம்பத்தூர் 7வது மண்டலம் 82வது வார்டு கருக்கு பிரதான சாலையில் நேற்று காலை மண் உள்வாங்கி பெரிய அளவில் திடீர் பள்ளம் ஏற்ப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 82வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் நீலகண்டன் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்த சாலையில் கடந்த ஒரு ஆண்டிற்குள் 8 முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வண்டி ஓட்டி செல்கின்றனர். மேலும் இந்த சாலை அருகே உள்ள வீடுகளில் இருப்பவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

சாலையில் ஏற்படும் இது மாதிரியான பள்ளங்களை சரியான முறையில் ஆய்வு செய்து தரமாக சாலை அமைக்கப்படாததால் தொடர்ந்து கொரட்டூர் மற்றும் கருக்கு பகுதியில் மண் உள்வாங்கி பள்ளம் விழுந்து கொண்டு வருகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, புதூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தக்கூடிய கருக்கு பிரதான சாலை, அம்பத்தூர் சிடிஎச் சாலைக்கு இணையாக பார்க்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கருக்கு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இரண்டு பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை என எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படுகிறது.

கருக்கு பிரதான சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் பள்ளம் ஏற்படும் என்ற அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் திடீர் பள்ளம் ஏற்பட்ட அதே இடத்தில் நேற்று காலை மீண்டும் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. 10 ஆழம் 15 அடி அகலம் கொண்ட ராட்சத பள்ளத்தால் கருக்கு பிரதான சாலை அடைக்கப்பட்டு பொதுமக்கள் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக கருக்கு சாலையில் பள்ளம் ஏற்படுவதால் எந்நேரமும் திடீர் பள்ளம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

Related Stories: