பெரம்பூர் சேமாத்தம்மன் கோயில் திமுக ஆட்சியில் 4,000வது குடமுழுக்கு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களைக் கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயில் பல்வேறு கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன.

1,000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் முதல்வர் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார். அரசு மானியம், பொதுநல நிதி, திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 77 திருக்கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புற திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டு, இதுவரை 10,000 திருக்கோயில்களுக்கு ரூ.212.50 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழுவால் 14,979 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், 1,000வது குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலிலும், 2,000வது குடமுழுக்கு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வீரட்டேஸ்வரர் திருக்கோயிலிலும், 3,000வது குடமுழுக்கு நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வரர்சுவாமி திருக்கோயிலிலும் நடத்தப்பட்டன. 4,000வது குடமுழுக்குநன்னீராட்டுப் பெருவிழா சென்னை, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில், நாளை அன்னை தமிழில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் அமைச்சர்கள், தவத்திரு ஆதீனங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், சமய ஆன்றோர்கள், சான்றோர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

Related Stories: