இந்தி பட உலகம் வேரை இழந்துவிட்டது: நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு

சென்னை: கடந்த சனிக்கிழமை கோழிக்கோட்டில் 9வது கேரள இலக்கிய திருவிழா நடந்தது. 4 நாள் நடந்த விழாவில், நோபல் பரிசு பெற்ற அப்துல் ரசாக் குர்னா, அபிஜித் பானர்ஜி மற்றும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், எழுத்தாளர் கிரண் தேசாய், கட்டுரையாளர் பிக்கோ அய்யர், ஞானபீட விருது பெற்ற பிரதீபா ரே, விளையாட்டு வீரர்கள் ரோகன் போபண்ணா, பென் ஜான்சன், விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் உள்பட 400க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது நடிகர் பிரகாஷ்ராஜ், இந்தி பட உலகை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் வலுவான படங்களை உருவாக்குவதாக நான் உணர்கிறேன். மறுபுறம், இந்தி படவுலகம் தனது வேர்களை இழந்துவிட்டது. இப்போது அது, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் போல் மாறிவிட்டது. அதில் பார்ப்பதற்கு எல்லாம் அழகாக தெரிந்தாலும், பிளாஸ்டிக் போல் தெரிகிறது. அவற்றில் எந்த சாராம்சமும் இல்லை. எங்களிடம் (தென்னிந்தியாவில்) இன்னும் சொல்வதற்கு பல கதைகள் இருக்கின்றன. தமிழிலுள்ள புதிய இளம் இயக்குனர்கள், தலித் பிரச்னைகளை பற்றி பேசுகிறார்கள். அது அதிக நம்பிக்கையை அளிக்கிறது.

மும்பை திரைப்பட துறை மல்டிபிளக்சுகளுக்காக மட்டுமே திரைப்படங்களை தயாரிக்க தொடங்கியது. அந்த படங்கள் நன்றாக ஓடியது. இதனால், இந்தி பட உலகம் ‘பேஜ் 3’ கலாச்சாரத்துக்குள் சென்றுவிட்டது. இன்று எல்லாம் பணம் மற்றும் வெளித்தோற்றத்தை பற்றியதுதான். ரீல்ஸ், ‘பேஜ் 3’ செய்திகள் மற்றும் ஆரவாரமான சுயவிளம்பரம் போன்ற செயல்பாடுகளில், இந்த துறை பார்வையாளர்களுடனான தனது தொடர்பை இழந்து விட்டதாக உணர்கிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

Related Stories: