பழநி தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: பிப்.1ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச தேரோட்டம் பிப்.1ம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தைப்பூச்திருவிழா, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோயிலின் உட்பிரகாரத்தில் கொடி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது சுற்றியிருந்த திரளான பக்தர்கள் ‘அரோகரா’ என கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.

தைப்பூசத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 31ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெறும். தைப்பூசத் தேரோட்டம் பிப்.1ம் தேதி மாலை 4 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது. 4ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடையும்.

தங்கரத புறப்பாடு இல்லை
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 30ம் தேதி முதல் பிப்.3ம் தேதி வரை பழநி முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிப்.4ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: