சென்னை: சென்னையில் வரும் 8ம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று தாம்பரத்தில் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது. மாநில மகளிர் அணி செயலாளர் வந்தனா வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் அருள்குமார் மற்றும் மாநில பொருளாளர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களின் 22 ஆண்டு கால ஓய்வூதிய போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை புத்தாண்டு பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பலமுறை அழைத்து பேசி 22 ஆண்டு கால ஓய்வூதிய கனவை நனவாக்க ஜாக்டோ- ஜியோ பேரமைப்பிற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், 6.5 லட்சம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஓய்வு கால வாழ்க்கையை காக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் அளித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை வரவேற்று வரும் காலங்களில் நாங்கள் செலுத்தும் 10% பங்களிப்பைக் கூட முழுமையாக ரத்து செய்யும் வகையில் முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையோடு அவரிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைப்பது, கடந்த ஆட்சியில் முடக்கப்பட்ட அகவிலைப் படி உயர்வினை மீண்டும் வழங்கியதற்கும், கடந்த ஆட்சியில் முடக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் தமிழ்நாடு மாநில அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தியதற்கும் நன்றி தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு ஜாக்டோ -ஜியோ பேரமைப்பின் சார்பாக வரும் பிப்ரவரி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் லட்சக்கணக்கான ஆசிரியர் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு நடத்தவுள்ள மிக பிரமாண்டமான நன்றி அறிவிப்பு மாநாட்டில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக சுமார் 40,000 பேர் கலந்து கொண்டு முதல்வருக்கு நன்றியினை தெரிவிப்பது, மேலும் 2004 முதல் 2006 மே மாதம் வரை முறைப்படுத்தாமல் விடுபட்ட தொகுப்பூதிய பணி காலத்தை முறையான பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வை விரைந்து நடத்தி ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும்.
உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய நடைமுறையிலே வழங்கிட வேண்டும். ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
