உப்ஸலா: சுவீடனில் நடந்த போல் வால்ட் போட்டியில் சுவீடன் வீரர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ், 6.31 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்துள்ளார். சுவீடனில் உப்ஸலா நகரில் கோல் ஊன்றி உயரம் தாண்டும் போல் வால்ட் போட்டிகள் நடந்தன. அதில், சுவீடனை சேர்ந்த போல் வால்ட் வீரர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் பங்கேற்று 5.65 மீட்டர், 5.90 மீட்டர், 6.08 மீட்டர் என 3 முறை முதல் முயற்சியிலேயே அதிக உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இருப்பினும், மேலும் 23 செ.மீ உயரம் கூட்டும்படி அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி, அவர் தாண்ட வேண்டிய உயரம் 6.31 மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டது. அதையும், முதல் முயற்சியிலேயே அநாயாசமாக தாண்டிய டுப்ளான்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.
இதற்கு முன், கடந்த 2020ல், 6.17 மீட்டர் உயரம் தாண்டி டுப்ளான்டிஸ் உலக சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார். இப்போட்டியில் நார்வே வீரர் ஸோன்ட்ரே கட்டர்ம்ஸென் 6 மீட்டர் உயரம் தாண்டி 2ம் இடம் பிடித்தார். இந்தாண்டு துவக்கத்தில் கிரீக் உள்ளரங்க ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் 6.17 மீட்டர் உயரம் தாண்டிய கிரேக்க நாட்டு வீரர் எம்மானோயுல் கராலிஸ், நேற்றைய போட்டியில் 3 முறை முயன்றபோதும் 6 மீட்டர் உயரத்தை தாண்ட முடியாமல் தோல்வியை தழுவினார். டுப்ளான்டிஸ் தற்போது படைத்துள்ள புதிய உலக சாதனையை, போலந்தின் டோருன் நகரில் இம்மாத இறுதியில் நடக்கும் உலக உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது அவரே முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
