சின்சினாட்டி: கான்காகாஃப் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று, பால் அரியோலா சிறப்பாக ஆடி அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டதால் சியாட்டில் அணி அபார வெற்றி பெற்றது. வடஅமெரிக்கா, கரீபியன், மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து அணிகள் மோதும் கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. சின்சினாட்டி நகரில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் சின்சினாட்டி எப்சி, டிக்ரெஸ் யுஏஎன்எல் அணிகள் மோதின. இப்போட்டியின் துவக்கம் முதல் சின்சினாட்டி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அவர்களின் முயற்சிக்கு பயனளிக்கும் வகையில், போட்டியின் 6வது நிமிடத்தில் அந்த அணியின் கெவின் டென்கே முதல் கோல் போட்டு அசத்தினார். 2வது பாதியில் சின்சினாட்டி அணியின் டாம் பார்லோ அணியின் 2வது கோல் போட்டார். போட்டியின் கடைசி கட்டத்தில், 83வது நிமிடத்தில் கெவின் டென்கே மேலும் ஒரு கோல் போட்டு அணியின் பலத்தை உயர்த்தினார். அதன் பின் இரு அணி வீரர்களும் கோல் போடவில்லை. அதையடுத்து, 3-0 என்ற கோல் கணக்கில் சின்சினாட்டி அபார வெற்றி பெற்றது.
வான்கூவர் நகரில் நேற்று நடந்த மற்றொரு ரவுண்ட் ஆப் 16 சுற்றின் முதல் நிலை போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியும், சியாட்டில் சவுண்டர்ஸ் அணியும் மோதின. போட்டியின் 45வது நிமிடத்தில் சியாட்டில் அணியின் பால் அரியோலா அணியின் முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். தொடர்ந்து அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 58வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினார். கடைசி கட்டத்தில் 70வது நிமிடத்தில் சியாட்டில் அணியின் பால் ரோத்ராக் மேலும் ஒரு கோல் போட்டார். அதன் பின் கோல் விழாததால், சியாட்டில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது.
