ஐதராபாத்: தெலங்கானாவில் தெருநாய்கள் பலி எண்ணிக்கை 900ஐ கடந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலின்போது தெருநாய்கள் தொல்லை அகற்றப்படும் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாய்களை கொலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் நாய்களை கொல்வதற்காக பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இரண்டு பேரை நியமித்துள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து நாய்களை கொல்வதற்காக நியமிக்கப்பட்ட அந்த இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையின்போது புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 முதல் 80 நாய்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. ஜக்தியால் மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 நாய்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. கொல்லப்பட்ட நாய்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது.
