கோர்பா: சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் தோதிபாரா பகுதியில் ஹஸ்தேவ் ஆற்றுக் கால்வாய் மீது 70 அடி நீள இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. 40 ஆண்டு பழமையான இந்த பாலம் 10 டன் எடை கொண்டது. இரவு 11 மணி வரையிலும் பாலத்தை பயன்படுத்திய நிலையில், கடந்த 18ம் தேதி காலையில் பார்த்த போது இரும்பு பாலம் மாயமாகி இருந்தது. கேஸ் கட்டர் மூலம் பாலம் இரவோடு இரவாக வெட்டி திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்ததில் காயலான் கடைக்கும் பழைய இரும்பாக பாலத்தை விற்பதற்காக துண்டு துண்டாக வெட்டி திருடியதாக கூறி உள்ளனர். ஆற்றில் மறைக்கப்பட்ட 7 டன் இரும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான 2 பேர் உட்பட மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
